கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் (Akshay B J) என்ற வாலிபர், தனது தந்தை பீம்ராஜ் (52), தாய் ஜெயலட்சுமி (50) மற்றும் தங்கை அம்ருதா (18) ஆகிய மூவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்க 300 கி.மீ பயணம் செய்து பெங்களூரு திலக் நகர் போலீஸ் நிலையத்திற்கு வியாழக்கிழமை இரவு சென்ற அக்ஷய், தனது குடும்பத்தினரைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.

அவர்கள் பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்தபோது மாயமாகிவிட்டதாகப் பொய் கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது அப்படி யாரும் வரவில்லை எனத் தெரிந்தது.

மாயமானதாகக் கூறப்பட்ட தந்தையின் செல்போன் அக்ஷயிடமே இருந்ததை தொழில்நுட்ப ஆய்வில் போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அக்ஷய் உண்மையை ஒப்புக்கொண்டார்.

முதலில் தாயைக் கொன்றவர், பின்னர் வீட்டிற்கு வந்த தங்கை மற்றும் தந்தையை அடுத்தடுத்துத் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் வரவேற்பு அறையிலேயே பள்ளம் தோண்டி மூவரையும் புதைத்துள்ளார். துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க அந்த இடத்தில் அதிகளவில் நறுமணத் திரவியங்களை (Perfume) தெளித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) போலீசார் அந்த இடத்திற்குச் சென்று அக்ஷய் முன்னிலையிலேயே உடல்களைத் தோண்டி எடுத்தனர்.