ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலக்காரன்பாளையத்தில் விவசாயியான சௌந்தரராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சௌந்தரராஜன் தோட்டத்துக்கு அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சௌந்தரராஜன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சௌந்தரராஜனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சௌந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.