திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஓபளாபுரம் கிராமத்தில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் பெட்ரோல் கேனுடன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 3 பேரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ரவிச்சந்திரன் கூறியதாவது, ஆயக்குடியில் எனக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் இருக்கிறது.

அதில் 6 ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து சிலர் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த பத்திரபதிவை ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளார். அவர்களிடம் இது தொடர்பாக புகார் அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் தனது புகார் மனுவை பதிவாளர் சுரேந்தரிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்த பிறகு மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.