கர்நாடக மாநிலம் பெங்களூருவின் அலசூர் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோமேஸ்வரா கோயில் நிர்வாகம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
இங்குப் பல ஆண்டுகளாகத் திருமணங்கள் நடத்தி வந்த நிலையில், இனிமேல் தங்கள் கோயிலில் திருமணங்கள் நடத்தப்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தக் கோயிலில் திருமணம் செய்த தம்பதியினரிடையே விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து வழக்குகளுக்காகக் கோயிலில் பதிவு செய்த ஆவணங்களைக் கேட்டுப் பலரும் அடிக்கடி வருவதால், தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், விவாகரத்து வழக்குகளில் திருமணம் செய்து வைத்த பூசாரிகளையும் சிலர் நீதிமன்றப் படிகளில் ஏற வைப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே, பக்தர்களுக்குச் சரியாகச் சேவை செய்ய முடியவில்லை எனக் கூறி, திருமணங்களை நிறுத்தும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.
