ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்தியர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. AIMIM கட்சி தலைவர் மற்றும் ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஓவைசி, இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இளைஞர்களுக்கு வேலையை கொடுக்க முடியவில்லை. ஆனால் மூன்று குழந்தைகள் வேண்டும் என்று அழுத்தம் கொடுக்குறீங்க. இது எப்படிப்பட்ட கொள்கை?” எனக் கேள்வி எழுப்பிய ஓவைசி, “பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சிறிய குடும்பம் தான் தேசபக்தி எனக் கூறியிருக்கிறார். ஆனால் பாகவத் அவர்களோ அதன் எதிராக பேசுகிறார்கள். யாரைப் பின்பற்ற வேண்டுமென்று மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், பெண்கள் மற்றும் குடும்பத்தினர் தாங்களே முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை, ஒருங்கிணைப்பில்லாமல் சமூகம் மீது கட்டாயமாக்குவது தவறு என்றார்.
இதேவேளை, டிஎம்சி எம்பி மமுவா மொயித்ரா தெரிவித்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை குறித்து கேட்ட போது, “எந்த விதமான விமர்சனமாக இருந்தாலும் அது பண்புடன் இருக்க வேண்டும். பிரதமரை விமர்சிக்கலாம், ஆனால் தாண்டி செல்லக்கூடாது. நாம் நாகரிகத்துடன் உரையாட வேண்டியது அவசியம்,” என ஓவைசி தெரிவித்தார்.
