குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த கதிரியக்க நிபுணர் டாக்டர் ஹர்ஷ் வியாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மருத்துவ அறிக்கை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வெறும் 28 வயதே ஆன ஒரு இளைஞர், தான் ‘எப்போதாவது ஒருமுறை’ (Occasional Drinker) தான் மது அருந்துவதாகக் கூறிய நிலையில், அவரது கல்லீரல் முழுமையாகச் செயலிழந்து ‘சிர்ரோசிஸ்’ (Cirrhosis) எனப்படும் மீட்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரியவந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dr Harsh Vyas MBBS , DNB(Radio Diagnosis) (@runningradiologist)

அந்த இளைஞரின் வயிற்றில் அதிகப்படியான நீர் கோர்த்திருப்பதையும் (Ascites), அது அவருக்குக் கடும் வலியை ஏற்படுத்தி இருப்பதையும் அந்தப் படம் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

“என் மகன் குணமாகி விடுவான் தானே?” என்று அந்த இளைஞரின் தாய் கேட்ட கேள்விக்குத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என டாக்டர் வியாஸ் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலைமைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்றும், அது மிகவும் சவாலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மது அருந்துவதால் இதுவரை உங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; விஷம் உங்களைத் தாக்க இன்னும் நேரம் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

யாரும் விஷத்தை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டாம்” என்று அவர் எச்சரித்துள்ளார். எப்போதாவது மது அருந்துவதும் மெல்லக் கொல்லும் விஷம் என்பதற்கு இந்த 28 வயது இளைஞரின் நிலையே சாட்சி என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.