உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ரா தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும், அவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்தியப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், வெளிநாட்டுப் பயணிகளிடம் சுமார் 1100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இவ்வளவு அதிகப் பணம் கொடுத்தும், சாதாரண வரிசையிலேயே தங்களை நிற்க வைப்பதாக வெளிநாட்டுப் பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.

“இவ்வளவு அதிகக் கட்டணம் செலுத்தியும் இந்தியப் பயணிகளுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பது நியாயமற்றது; உலக அதிசயத்தைப் பார்க்க வருபவர்களுக்கு இன்னும் சிறந்த வசதிகளைச் செய்து தர வேண்டாமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடிநீர் மற்றும் காலணி உறைகள் வழங்கப்பட்டாலும், விஐபி அந்தஸ்து அல்லது தனி வரிசை வசதி இல்லாதது வெளிநாட்டுப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சுற்றுலாத் துறை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.