ஈரோடு அருகே வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக பங்களாபுதூர் காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து, கள்ளிப்பட்டி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். 2 சக்கர வாகனத்தில் வழியாக வந்த ப்ராபஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அதிகாரிகளை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர்.

அவர்களை துரத்தி பிடித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்  இருவரிடமும் நடத்திய விசாரணையில். அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜா  தான் கள்ளநோட்டுக்கான விநியோகிஸ்தர் என்பது தெரியவந்தது. பின் கோவிந்தராஜை கைது செய்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்  அச்சடித்த கள்ள நோட்டுகளை வீட்டுக்கு வெளியே குப்பை தொட்டியில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் .

மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர், லேப்டாப், பேப்பர்கள், இன்க்  பாட்டில்கள் போன்றவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பின் கோவிந்த ராஜிடம் மேற்கொண்ட விசாரணையில்,  இருசக்கர வாகன மெக்கானிக்காக்க பணியாற்றி வருவதாகவும், தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாகவும்  வாக்குமூலம் அளிக்க, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.