மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு மத்திய அரசு கொடுத்த குடச்சல் கொஞ்சநஞ்சம் அல்ல. ஆளுநரை வைத்து மத்திய அரசின் தலையிடை தடுக்கும் நோக்குடன் டெல்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், ஜனநாயகம் கூட்டாட்சி கொள்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சி படியே இயங்குகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என்றால் அந்த அரசின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சருடைய சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த செயல்பாடு, கட்டமைப்பு உடைந்து விடும். அதனால் அதிகாரிகளை நியமிக்கக்கூடிய அதிகாரம் டெல்லி அரசுக்கு இருக்கின்றது என்பதை தீர்ப்பின் மூலம் சொல்லியுள்ளார்கள். இந்தத் தீர்ப்பின் மூலம் இனி மாநில அரசுகளில் ஆளுநரின் தலையீடு தடுக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆளுநரின் தலையீட்டுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மத்திய பாஜக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.