மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் ஐ-பேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் இல்லம் உள்ளிட்ட பத்து இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
#WATCH | Kolkata | TMC Chairperson and West Bengal CM Mamata Banerjee leads a rally following the ED raid on I-PAC yesterday. pic.twitter.com/puAMdQLKB3
— ANI (@ANI) January 9, 2026
பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்தச் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சோதனையின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேடியாகப் பிரதீக் ஜெயின் இல்லத்திற்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே உள்ளே சென்ற முதல்வர், சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜியின் இந்தச் செயலால் விசாரணைக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், முக்கிய ஆதாரங்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தேர்தல் இரகசியங்களைத் திருட முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொல்கத்தாவில் இன்று பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வியூகங்களைச் சிதைக்கவே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதாக மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநில முதல்வர் ஒருவரே சோதனை நடக்கும் இடத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
