இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி LPG சிலிண்டருக்கு அரசாங்கத்தால் இப்போது மானியமானது வழங்கப்படுகிறது. செய்தி நிறுவனமான PTI-ன் அறிக்கையின்படி, முதலமைச்சரின் கேஸ் சிலிண்டர் திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க அரசாங்கம் ரூ.750 கோடிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த முக்கிய உத்தரவை 2023-24 நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டில் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு ஏழை மக்களுக்காக புது திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிக விலையில் சிலிண்டர்களை வாங்க முடியாதவர்கள் இந்த திட்டத்தின் பலன் பெற முடியும்.

ஆகவே பிபிஎல் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு 12 சிலிண்டர்களுக்கு மானியமும் கொடுக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் ஏறத்தாழ 73 லட்சம் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். ஆகவே நீங்கள் பிபிஎல் (அ) உஜ்வாலா யோஜனாவின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பின், மாதம் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டரைப் பெறலாம்.

எனினும் இதற்கு உங்களது வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைந்திருக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து பிபிஎல் மற்றும் உஜ்வாலா யோஜனா பட்டியலை ராஜஸ்தான் அரசு கோரி உள்ளது. தரவு கிடைத்தவுடன் இதற்கான செயலாக்கம் துவங்கப்படும். இதற்கிடையில் இத்திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.