இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் இணையதளம் மூலமாகவே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்க லாகின் ஐடி, பாஸ்வேர்ட், மொபைல் நம்பர் ஆகிய மூன்றும் இருந்தாலே போதுமானது. இதன் மூலம் உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தற்போது ஆன்லைனில் எப்படி புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் www.onlinesbi.com என்ற இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டும். அதன்பிறகு பயனர் பெயர், பாஸ்வேர்ட் போன்றவற்றை உள்ளீடு செய்து நெட் பேங்கிங் போர்டலில் இ சேவைகள் என்பதை தேர்வு செய்து ஏடிஎம் கார்டு சேவைகள் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தோன்றும் புதிய பக்கத்தில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு கோரிக்கை என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதில் இரண்டு விருப்பங்கள் இருக்கும். அதாவது ஓடிபி அல்லது சுயவிவர கடவுச்சொல்லை பயன்படுத்துதல். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். அதன் பிறகு கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பி என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுடைய எல்லா கணக்குகளும் அடுத்த பக்கத்தில் முதன்மை அல்லது இரண்டாம் நிலை கணக்குகளாக காட்டப்படும். உங்களிடம் ஒரு கணக்கு இருந்தால் இரண்டு பக்கங்களிலும் ஒரே கணக்குகள் காட்டப்படும். இதைத்தொடர்ந்து எந்த கணக்கின் ஏடிஎம் கார்டு என்பதை தேர்வு செய்து, கார்டில் நீங்கள் அச்சிட விரும்பும் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் கார்டு வகையை தேர்ந்தெடுத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தோன்றும் புதிய திரையில் அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு மீண்டும் சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய கார்டு கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காட்டும். மேலும் இதைத் தொடர்ந்து 7 அல்லது 8 நாட்களுக்குள் உங்களுக்கு ஏடிஎம் கார்டு வீட்டின் முகவரிக்கு வந்துவிடும்.