அதானி அசுர வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்பதை மறைக்க முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உத்தம் குமார், மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிபிஐ, சிஏஜி அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப்போட்டு உள்ளதாக கூறினார்.

ஆனால் உண்மை வெளிப்பட்டே தீரும் என்றும் அதானியின் வீழ்ச்சி வெளிப்பட்டு கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனை அமலாக்க துறையோ சிபிஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது எனக் கூறிய அவர் இது ஆரம்பம்தான். பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவது யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

கட்சியின் லட்சியத்தையும் கொள்கையும் தான் பேச வேண்டுமே தவிர ஆம்பளையோ என கேட்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைவராக உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பணம் கொடுப்பதால் யாரும் வாக்கு செலுத்தி விட மாட்டார் என்றும் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்தார்.