ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக நேற்று (பிப். 17) ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக ஆட்சியின்போது ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை தரம் உயர்வு, கனிராவுத்தர் குளம் புதுப்பிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியமைந்து 21 மாதங்களாகியும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலுக்காக இப்போது 25 அமைச்சர்கள் இங்கு முகாமிட்டு உள்ளனர். இதற்கு முன்னதாக ஒரு அமைச்சர் கூட இங்கு வரவில்லை. ஒவ்வொரு அமைச்சரும  ஈரோட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும். அதை விட்டுவிட்டு இப்போது வீதி வீதியாக வந்து குறை கேட்கின்றனர். மக்களை ஏமாற்றுவதில் திமுக-வினர் கில்லாடிகள். ஆகவே  யாரும் ஏமார்ந்துவிட வேண்டாம் என்று இபிஎஸ் பேசியுள்ளார்.