தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சிக்கும்போது, சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இணையதளத்தில் ‘லாகின்’ செய்ய முடிகிறது. புதிதாக மனு செய்வோருக்கு அல்லது செல்போன் எண் இல்லாதவர்களுக்கு விண்ணப்பத்தைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், படிவத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் ஓ.டி.பி. அங்கீகாரம் கோரப்படுகிறது.

இதில் பெரும்பாலானோருக்கு, “உங்களது பெயர் சரியாக இல்லை” என்றே பதில் வருவதால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தடைபட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையே இந்தச் சிக்கலுக்குக் காரணம்.

பொதுவாக, தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் ஆதார் அட்டையில் ஒருவரின் பெயருடன் ‘இனிசியல்’ அல்லது தந்தை பெயரும் முழுமையாகச் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இடம்பெற்று, ‘இனிசியல்’ சேர்க்கப்படாமலும், தந்தை பெயர் தனியாகவும் இருக்கும். ஆனால், வடமாநிலங்களில் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை இரண்டிலும் பெயர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால் அங்கே இந்தச் சிக்கல் இல்லை.

எனவே, தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்த பெயர் வேறுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், ஆன்லைன் மூலமான திருத்தப் பணி தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.