தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு மாற்றுக்கட்சியினரைத் தங்கள் பக்கம் இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து முக்கியப் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்புச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இரு கட்சிகளும் பலப்பரீட்சை பார்க்கும் வகையில் ஆட்களை இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுகவின் இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அதிமுக இன்று ஒரு முக்கிய இணைப்பை நிகழ்த்தியுள்ளது. விருதுநகர் வடக்கு மாவட்டத்தின் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளராகப் பதவி வகித்த அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்புச் சம்பவம் திமுகவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஒரு கட்சியின் பிரதான பிரிவு அமைப்பாளரே மாற்று கட்சிக்குச் சென்றது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த ஆள்சேர்க்கை மோதல் மேலும் தீவிரமடையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
