தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ( SIR) அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தங்களுக்குப் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, இன்று (நவ. 18) இந்த SIR பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ மற்றும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்புகள் கூட்டாக அறிவித்திருந்தன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக வாக்காளர் திருத்தப் பணிகள் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவானது.

இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கவும், வாக்காளர் பட்டியல் பணியைத் தொடரவும் அரசுத் தரப்பில் இருந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழகத் தலைமைச் செயலர் முருகானந்தம் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைப் புறக்கணித்து எந்தவொரு அரசு ஊழியரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும், அவ்வாறு பணியைப் புறக்கணித்து விடுப்பு எடுத்தால், ஊதியம் கிடையாது (No Work, No Pay) என்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அரசின் இந்த அதிரடி உத்தரவு, ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திட்டமிட்ட வேலை நிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.