மத்தியப் பிரதேசத்தில் பிரபலமான பாக்வீர் தாம் பீடாதிபதி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் தர்பாரில், பேய் பிடித்த பெண்ணிடம் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக சாமி ஆடுபவர்கள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் பேய் விரட்டுவதாக தீரேந்திர சாஸ்திரி தர்பாரில் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி வந்த ஒரு பெண்ணிடம் மைக் நீட்டிய செய்தியாளர், “நரேந்திர மோடி யார்?” என்று கேட்க, அந்தப் பெண் “அவர் நம் நாட்டின் பிரதமர்” என்று சரியாகப் பதில் கூறுகிறார்.

அதன் பிறகு “பாஜக ஜிந்தாபாத்” என்றும், ராகுல் காந்தியின் பெயரைக் கேட்டபோது “ராகுல் காந்தி ஜிந்தாபாத்” என்றும் மாறி மாறி கோஷமிடுகிறார். “உனக்கு ஏன் சன்னியாசி பாபாவை (தீரேந்திர சாஸ்திரி) பிடிக்கவில்லை?” என்று கேட்டபோது, “அவர் என்னை குழந்தையை பலி கொடுக்க விடுவதில்லை” என்று அந்தப் பெண் கூறியது அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.

உலகிலேயே பேய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறோம் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை கிண்டலடித்து வந்தாலும், இது போன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் வலுவாக எழுந்து வருகிறது.