தமிழர்களால் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் மார்கழி மாதத்தின் கடைசியில் போகிப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதே போகிப் பண்டிகையின் முக்கிய நோக்கம். போகி பண்டிகையின் போது வீட்டிற்கு வர்ணம் பூசி, வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து, வீட்டையும் நன்கு தூய்மைப்படுத்துவார்கள். தமிழகத்தில் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் போகி பண்டிகைக்கும் தனி சிறப்பு இருக்கிறது. ஜனவரி 13,14 ஆகிய தேதிகளில் போகி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. போகி பண்டிகை தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொண்டாடப்படும்.

இந்நிலையில் நம் முன்னோர்களால் போக்கி என்று அழைக்கப்பட்ட நிலையில், காலம் செல்ல செல்ல போக்கி என்பது மருகி தற்போது போகி என்று மாறிவிட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருட்கள் போன்றவற்றை வீட்டு வாசல் முன்பு போட்டு போகி பண்டிகையின் போது எரிப்பார்கள். அதோடு வீட்டை சுத்தம் செய்த பிறகு வீட்டில் உள்ள தேவையற்ற அனைத்து பொருட்களையும் போகி பண்டிகையை முன்னிட்டு எரித்து விடுவார்கள். பழைய பொருட்கள் எரியும்போது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்களும் அழியும் என்பது ஐதீகம். மேலும் போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரிக்காமல் புவி மாசுபடாதவாறு தூய்மையான முறையில் போகி பண்டிகையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.