தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படும். முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு பண்டிகைகள் கொண்டாடப்படுவது எதற்காக என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

போகி பண்டிகை:

போகி என்பதே பழையன கழித்தல் என்பதாக அடையாளம் கொண்டு வேளாண்மையை மேற்கொண்டவர்களால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். மார்கழி மாதத்தின் இறுதியில் இந்த போகி பண்டிகை கொண்டாடப்படும். பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுவதால் பழைய பொருட்களை இந்த நாளில் எரித்து ஒரு பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். அந்த காலத்தில் போகி பண்டிகை என்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.

தைப்பொங்கல்:

பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்டிகையாக கருதப்படுகிறது. தமிழர் திருநாளாக தமிழர்களாலும் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இந்த தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி தெரிவிக்கும் விதமாக நிற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து கருவிகளையும் அங்கு வைத்து சூரியனையும் பூமியையும் விவசாயிகள் வழங்குவார்கள். இதுதான் சூரிய பொங்கல்.

மாட்டுப் பொங்கல்:

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். இந்த நாளில் மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத உயிரினமாக இருக்கும் எருமைகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி அலங்கரித்து குடிக்க பச்சரிசி கஞ்சி கொடுப்பார்கள். உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

காணும் பொங்கல்:

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்று அழைப்பார்கள். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் உள்ளிட்டவை இந்த திருநாளில் அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு, உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகச போட்டிகள் நடைபெறும். இந்த காணும் பொங்கல் பெண்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தை கட்டி அதனை எடுத்து புதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் கன்னி பெண்கள் பூசிக் கொள்வார்கள். இதுவே காணும் பொங்கல் ஆகும்.

இவ்வாறாக தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.