பொதுமக்கள் பனிப்பொழிவு பிரதேசம் என்றாலே துருவப் பகுதியையும், ஐரோப்பிய, கனடா நாடுகளையும் மட்டுமே கூறுவர். ஆனால் இந்தியாவின் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்றால் இமயமலை பகுதிகளில் ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும். இது போன்று பனிப்பொழிவை பார்க்க தென்னிந்தியாவில் அருமையான சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அதுவும் சென்னைக்கு மிக அருகில் உள்ள இடம்தான். அதாவது தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள லம்பா சிங்கி என்ற கிராமம் ஆகும்.

இது ஒரு மலைமுகடு கிராமம். இங்கு ஆண்டுக்கு ஒரு முறை நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை மழை போல பனிப்பொழிவு நிகழ்கிறது. இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிட கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகள் மேகங்கள் சூழ்ந்த நிலையில் எப்பொழுதும் அருமையான காலநிலையேகொண்டுள்ளது. மலைப்பகுதிகளில் காப்பி செடி, பைன் மரங்கள் மற்றும் தைல மரங்கள் பயிரிடப்பட்டு இப்பகுதி மக்களால் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது. அதிகமான காட்டெருமைகள் காணப்படுகின்றன. இந்தப் பனிப்பொழிவு நிகழும் இடம் கொர்ரா பயலு எனக் கூறப்படுகிறது.