புதுக்கோட்டையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், சில விஷயங்களில் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். சில விஷயங்களில் மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இதில் முரண்பாடு ஏற்படும் போது மத்திய அரசுதான் சட்டத்தை இயற்றும். ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில் அதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். அப்போது திமுக அரசு ஒருவரையாவது கைது செய்ததா?.

சைபர் கிரைம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மட்டும்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. மாநில அரசுக்கு இல்லை. இதைத்தான் ஆளுநர் சொல்கிறார். அரசு திரும்பத் திரும்ப அவசர சட்டம் இயற்றினாலும் ஆளுநர் அதை குடியரசு தலைவருக்கு தான் அனுப்புவார் என்றார். மேலும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், இரு தரப்பிலும் ஒரு சிலர் மாறி மாறி கருத்து தெரிவித்த நிலையில் தற்போது அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கூறினார்.