அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அண்மையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறார்கள். மேலும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடைபெற இருப்பதால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படலாம் என பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது ‌