ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருவதாகவும், பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுவதாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக இருக்கலாம், ஆனால் அதிமுக எப்போதும் தன்மானம் உள்ள கட்சியாகவே செயல்படும் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்ததாகவும், தொண்டர்களின் பேராதரவால் மட்டுமே கட்சி காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் சென்றதை மக்கள் மறக்கவில்லை என்று சாடினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழிப்பாக இருந்ததாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதோடு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகக் கூறிய அவர், நிர்வாகத் திறமையின்மை காரணமாக அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் வரி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தில் விரிவாகப் பேசினார்.