தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை பொருள் அதிகமாக நடமாடும் மாநிலமாகவும், கொலை மற்றும் கொள்ளை அதிகம் நடக்கும் மாநிலமாகவும், கலவர பூமி ஆகவும் மாறி அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேப்போன்ற ஒரு சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அது குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி கள்ளச்சாராயம் விற்பவர்களை கைது செய்திருந்தால் இப்போது இறந்தவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் திமுக அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாக திறமையின்மை ஆகியவற்றின் காரணமாக 3 பேர் உயிரிழந்து விட்டார்கள். கள்ளச்சாராயம் ஒருபுறம் என்றால் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம் மற்றொருபுறம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் இந்த சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்த திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் எதிர்காலத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.