திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது, கார்த்திகை தீப தரிசனம் பார்ப்பதற்காக 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் கூட்டத்தை சமாளிப்பது சவாலான ஒன்றாக இருக்கும் பக்தர்களின் வசதிக்காக 2700 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவில் மற்றும் கிரிவலப் பாதை பகுதிகளுக்கு 120 பள்ளி மற்றும் தனியார் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும். ஒரு நபருக்கு குறைந்தபட்ச 30 முதல் அதிகபட்சம் 50 என மாவட்ட நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஆட்டோவில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் இயங்கும் வெளி மாவட்ட ஆட்டோக்கள் பதிவுகள் செய்யப்படும். இந்நிலையில் அதிவேகமாகவும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையிலும் இயக்கப்படும் ஆட்டோக்கள் கண்காணிப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்ற கூடாது என அவர் கூறியுள்ளார். விழுப்புரம் போக்குவரத்து துறை துணை ஆணையர் ரஜினிகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவக்குமார் கண்காணிப்பாளர்கள் சுமதி ,சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.