காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 15 பேர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சந்தித்து பேசியுள்ளனர்.

அவர்கள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கிராம நிர்வாக அலுவலகத்தின் இடிந்த கட்டிடத்தை திரும்ப கட்டித் தர வேண்டும். நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்று தர வேண்டும். விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி வாங்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி உள்ளனர். அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.