கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வருகிற 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு 5000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் இருந்து உரிய படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.