நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் அடங்கிய குழுவினர் நாகை நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் போது 14, 18, 24, 35, 30 உள்ளிட்ட வார்டுகளில் வீடுகளில் நீண்ட காலமாக வரி கட்டாமல் இருக்கும் 120-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

மேலும் 50 பாதாள சாக்கடை இணைப்புகளையும்  துண்டித்துள்ளனர். வரி பாக்கி உள்ளவர்கள் உடனடியாக கட்ட வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் நாகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, கோவில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், கடை வாடகை, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் உரிமை கட்டணம் போன்றவற்றின்  நிலவை மற்றும் நடப்பு தொகையை முறையாக கட்ட வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைய ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.