தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதன்படி கோவில் உண்டியல்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 777 ரூபாய் பணம், 4 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்தது.

அதோடு பக்தர் ஒருவர் எழுதியிருந்த கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் தனது விவரம் எதுவும் குறிப்பிடாமல் பலருக்கு தான் தர வேண்டிய கடன் தொகையை சம்மந்தப்பட்டவர்கள் பெயருடன் எழுதியுள்ளார். 1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்து, சிலரிடம் இருந்து வர வேண்டிய தொகையான 10 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை விரைந்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இறுதியில் கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளை எழுதி கடன் அடைய வேண்டும் முருகா என கோரிக்கை விடுத்துள்ளார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.