திருவண்ணாமலை மாவட்டத்தில், குறிப்பாக ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவது, மாவட்ட நிர்வாகத்தின் கவலையை அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும் நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள், வடுகசத்து மற்றும் ஆரையாலம் கிராமங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும்  இதற்கு நிரந்தர தீர்வு காண இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் முன்னிலையில் ஆரணி டவுன் காவல்நிலைய வளாகத்தில் நடந்த வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கூட்டத்திற்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மொத்த வியாபாரிகள், மளிகைக் கடை உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில்,

தமிழக அரசின் உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிஎஸ்பி ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். மேலும் இதுபோன்ற செயல்கள் ஏதேனும் இருந்தால், 10581 என்ற  ஹெல்ப்லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு அவர் வணிகர்களுக்கு அறிவுறுத்தினார்.