ஆப்பிரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் விநோதப் பழக்கவழக்கங்களைக் கொண்ட பல்வேறு பழங்குடியினங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கின் பென்ச் மாஜி பகுதியில் வாழும் ‘சூரி’ என்ற பழங்குடியின மக்கள். சுமார் இருபதாயிரம் மக்கள்தொகை கொண்ட இந்தப் பழங்குடியினர், திருமணத்திற்காக ஆண்கள் இரத்தம் சிந்தும் சண்டையில் ஈடுபடுவது மற்றும் பெண்கள் உதடுகளில் மண் தட்டுகளை அணிவது போன்ற மிகவும் வித்தியாசமான இரண்டு பாரம்பரியங்களைப் பின்பற்றுகின்றனர்.

சூரி இன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், கட்டாயம் தங்கள் வீரத்தை நிரூபிக்க, நிர்வாணமாய் நின்று மரக் கம்புகளைக் கொண்டு சண்டையிட வேண்டும். இந்தச் சண்டையில் பலர் தங்கள் உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. சண்டையில் வெற்றிபெறும் வீரனுக்கே பெண் கிடைப்பார். இந்தச் சண்டைக்குத் தயாராகும் இளைஞர்கள், அதிக பலம் பெறுவதற்காக விலங்குகளின் இரத்தத்தைக் குடிப்பதோடு, அவற்றின் இறைச்சியையும் உண்கின்றனர்.

இந்தப் பழங்குடியினத்தில் உள்ள பெண்களுக்குப் பதினைந்து முதல் பதினெட்டு வயதாகும் போது, அவர்களின் கீழ்ப்புற உதட்டில் துளையிடப்பட்டு, மண் அல்லது மரத்தால் ஆன வட்ட வடிவிலான வட்டு ஒன்று அணியப்படுகிறது. அதற்காக, முதலில் அவர்களின் கீழ் முன்புறத்தில் உள்ள இரண்டு பற்கள் அகற்றப்படுகின்றன.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்வது இவர்களின் வழக்கம். ஒரு பெண்ணின் உதட்டில் அணியப்பட்டிருக்கும் வட்டு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிக சமூக மதிப்பும், வரதட்சணையாக அதிக கால்நடைகளும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பழக்கம், சூரி இனப் பெண்களை அடிமை வர்த்தகத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, மாடுகள், ஆடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்க்கும் கால்நடைப் பராமரிப்பை நம்பி வாழ்கின்றனர்.