மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் (Gwalior) நடந்த ஒரு கோரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் அண்ணன் இறந்த பிறகு, அந்த விதவை பெண்ணை (மச்சினி) திருமணம் செய்து கொள்ளுமாறு தம்பி (மச்சினன்) வற்புறுத்தி வந்துள்ளார்.
பெண்ணோ அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர் அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்தார்.
சுமார் பத்து மாதங்களுக்கு முன் தன் கணவரை இழந்த அந்தப் பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பிற்காகப் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குவாலியரின் காம்பு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, ஆசிட் பாட்டிலுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மச்சினன், மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். பெண் மறுக்கவே, ஆசிட்டை வீசிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் உணவகத்தை நடத்தி வந்த குற்றவாளியான அந்த நபர், குடிப்பழக்கம் மற்றும் வன்முறை குணம் கொண்டவர் என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மச்சினி ஊரை விட்டுச் செல்லத் திட்டமிட்டதால் ஆத்திரம் அடைந்து இந்த கொடூரச் செயலை செய்ததாகக் கைது செய்யப்பட்டவர் போலீசில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஆசிட் விற்ற கடையைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
