சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெறுப்படைந்த அந்நாட்டு இளைஞர்கள் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை மீறி வெளியில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே வெளியே சென்று கொரோனாவை வரவழைப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டால் குணமடைந்து விடுவோம் எனவும் அதன் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு, பக்குவமில்லாமல் பேசும் பல இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் சிலர் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டிருக்கிறார்கள். தகுந்த சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், அவர்கள் கடும் விளைவுகளை சந்தித்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல், சீன மக்களில் பலர் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வதில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.