கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அமைந்துள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஓடாத நிலையில் இருக்கும் 55 பேருந்துகளை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்க ஏலம் விடுவதாக டெண்டர் கூறினார்கள். ஏலம் மதிப்பு 28 லட்சத்து 20 ஆயிரத்து 94 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பழைய பில்களை வைத்து ஏலத்தில் மோசடி நடைபெற்றதாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணி, ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன், முருகானந்தம், துரைசாமி, ராஜேந்திரன் ரங்கநாதன் ஆகிய எட்டு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடந்த போது ரங்கநாதன், நடராஜன், ராஜேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணிக்கு தண்டனை விதித்தும், முருகானந்தம், துரைசாமி, நாகராஜன் ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது கோதண்டபாணிக்கு 82 வயது ஆகிறது. 47 அரசு பேருந்துகளை ஏலம் விட்டு லட்சக்கணக்கில் முறைகேடு செய்த கோதண்டபாணிக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், மூன்று கோடியே 32 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.