தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை தொண்டாமுத்தூரில் தயா பவுண்டேஷன் என்ற வீடு கட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் பாபு என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அவர்கள் குன்னத்தூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களை சந்தித்து புதிய கான்கிரீட் வீடு கட்டி தருவதாகவும், அதற்கு அறக்கட்டளை மூலம் வெளிநாட்டு நிதி உதவி மற்றும் உள்ளூர் சி.எஸ்.ஆர் நிதியுதவி பெற்று தருவதாகவும் தெரிவித்தனர். அதற்கு 52 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறினார். இதனை நம்பி சுமார் 36 பேர் அந்த நிறுவனத்தில் 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்தனர்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களின் குடிசை மற்றும் ஓட்டு வீடு இடிக்கப்பட்டு அஸ்திவாரம் போடப்பட்டது. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. அந்த நிறுவனத்தினரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வீடு கட்டி தருவதாகவும், இரு சக்கர வாகன கடன் வாங்கி தருவதாகவும் கூறி இதுவரை ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் ஷீபா ராணி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இம்மானுவேல் மற்றும் ராஜசேகரை தேடி வருகின்றனர்.