கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் பிரித்திவ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிஇ மெக்கானிக்கல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து பிரித்திவ் தனது விவரங்களை பதிவிட்டார். சில நாட்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் பிரபல கார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அவருக்கு மெயில் அனுப்பப்பட்டது. ஆன்லைன் மூலமாக பிரித்திவ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

இதனையடுத்து நேர்முக தேர்வில் வெற்றி பெற்றதால் வேலைக்கு சேர்வதற்கான பணி நியமன கடிதம், மாத சம்பளம் குறித்த தகவல்களை ஆன்லைன் மற்றும் தபால் மூலமாக அவர்கள் பிரித்திவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலைக்கு சேர்வதற்கு முன்பு நாங்கள் கொடுக்கும் பயிற்சி மற்றும் கார் நிறுவனத்தில் வேலை என்பதால் உங்களுக்கு தனியாக டூல்ஸ் வாங்க குறிப்பிட்ட தொகை தேவைப்படும் என அவர்கள் பிரித்திவிடம் தெரிவித்தனர்.

இதனை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக 16 லட்சத்து 25 ஆயிரத்து 277 ரூபாய் வரை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவர்கள் பிரித்திவை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது தான் அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரித்திவ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.