கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் ஆட்டோ டிரைவரான வினோத் காமராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் கீதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவுன்சிலர் கீதா கூறியதாவது, கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதே பகுதியில் வசிக்கும் பா.ஜனதாவினர் சிலர் எனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த வழக்கை போலீசார் விசாரித்த போது அது பொய்யானது என்பது உறுதியானது. இந்நிலையில் சிலர் எனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எனவே முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சமாதானப்படுத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.