கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்” என்ற செயலியின் மூலம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறி இணையதள லிங்குகளை அனுப்பியுள்ளார்.

இதனை நம்பிய ராமகிருஷ்ண சர்மா 100 ரூபாய் முதலீடு செய்த பிறகு அவர் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்கில் ஆயிரம் ரூபாய் இருந்தது. தொடர்ந்து தன்னிடம் இருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி 37 லட்சத்து 95 ஆயிரத்து 415 ரூபாயை ராமகிருஷ்ண சர்மா முதலீடு செய்துள்ளார். சிறிது நாட்களில் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் தன்னை மாற்றப்பட்டதை உணர்ந்த சர்மா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.