கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் தொழிலாளி ஒருவர் நுழைவு வாயில் அருகே தான் கொண்டு சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்ததும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்பிருப்பு மருங்கூரை சேர்ந்த லிங்க மூர்த்தி என்பது தெரியவந்தது. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான லிங்க மூர்த்தி கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு தற்போது 6 மாத பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் எனது மனைவி மற்றும் குழந்தையை சினேகாவின் சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இரண்டு பேரையும் மீட்டுத்தர வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள வந்தேன் என கூறினார். அவரை போலீசார் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.