கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வங்கி நிர்வாகத்தினர், கணினியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இவ்வாறு நடந்ததாக விளக்கம் அளித்து, குறிப்பிட்ட காலத்திற்கு உரிய வைப்பு தொகைக்கான வட்டி தொகையை தர மறுத்தது.

இது தொடர்பாக அரசு ரப்பர் கழக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கி கணக்கு முடக்கப்பட்ட காலத்திற்கான வட்டி தொகை 3 லட்சத்து 14 ஆயிரத்து 65 ரூபாய், 15 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.