
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றது. உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு எல்லாருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாக கொண்டு அனைவருக்கும் ஆட்சியை பாகுபாடின்றி வழங்கி வரும் திராவிட மாடல் எனும் மக்கள் அரசின் மீது தமிழ்நாடு எந்த அளவு நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டு கூட்டம் மெய்பித்திருக்கின்றது.
இதில் தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிட்ட இரும்பின் தொன்மை என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5300 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழர்கள் இரும்பு தாதுக்களில் இரும்பை பிரித்து எடுத்து கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரீகம் என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்து இருக்கின்றோம். மதுரை மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு எதிராக நடத்திய மாபெரும் மக்கள் பேரணியை சிறு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் அழுத்தமான வகையில் அறவழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருந்தது.
மேலும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும் திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் மத்திய பாஜக அரசை பணிய செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியை கைவிடுவதற்காக மதிய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. அதோடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கின்றது. டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன் விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொள்கின்றேன். விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி நம் உயர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரோடு கலந்த உடன்பிறப்புகளான உங்களையும் சந்தித்து மகிழ்வேன். 7-வது முறையும் தி.மு.க-வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்க சொல்வேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.