சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மாணவி சார் என்ற ஒருவருடனும் இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறியதாக கூறிய நிலையில் குற்றவாளி ஞானசேகரன் மட்டும் தான் என்று அரசும் காவல் துறையும் கூறியது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி யார் அந்த சார் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அன்று ஒரு சார் இருந்ததாகவும் இன்று தமிழகத்தில் பல சார்கள் பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது;
அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும். “SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலினின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
