இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்நிலையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் குறுக்கே பாலத்தை சீனா கட்டி முடித்தது. இந்த பாலத்தில் சீன ராணுவ வாகனங்கள் பயணிப்பதாக சாட்டிலைட் அவதாரங்கள் கிடைத்தன.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் ஒன்று எடுத்தது. அதன் மூலம் பாங்காங் ஏறியின் வடக்கே புதிய கிராமமே சீனா உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கிராமம் சுமார் எல்லையில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் மொத்தம் 70 நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கட்டிடங்களிலும் 6 முதல் 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

அதோடு இந்த பகுதியை சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுப்படுத்தும் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் சீனா மக்களை குடியேற்ற திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அவசியப்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்கு சீனா கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு சுமார் 4347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது.