IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிக் கொண்டது. அப்போது டாஸ் வென்ற குஜராத் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து குவித்தது. குஜராத் சார்பாக முகமது ஷமி, ரஷித்கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அதேபோல் ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார். அதன்பின் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் குஜராத் அணியானது களமிறங்கியது. இதில் விரித்திமான் சகா 25 ரன்னும், சாய் சுதர்சன் 22 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை எடுத்து குவித்தார். கடைசியில் குஜராத் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றியடைந்தது. இதன் வாயிலாக இந்த ஆண்டு IPL தொடரில் குஜராத் அணியானது தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.