செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இப்போது அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய கிரிமினல் விசாரணையை எதிர்கொண்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் கடந்த ஏப்ரல் 2025-இல் நடந்த பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய மாணவன் பீனிக்ஸ் இக்னர், தாக்குதலுக்கு முன்னதாக ChatGPT-யிடம் பல விசித்திரமான கேள்விகளைக் கேட்டுள்ளார் என்பது இப்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த வகையான ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? எந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்? போன்ற தகவல்களை அவர் ChatGPT மூலம் திரட்டியதாகக் கூறப்படுகிறது.

“ஒரு மனிதன் இது போன்ற ஆலோசனைகளை வழங்கியிருந்தால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பாய்ந்திருக்கும், அது ஏஐ-க்கும் பொருந்தும்” என்ற அடிப்படையில் புளோரிடா அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மேயர் இந்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், “நாங்கள் சட்டவிரோதமான எதையும் கூறவில்லை, இணையத்தில் ஏற்கனவே இருக்கும் பொதுவான தகவல்களையே வழங்கினோம்” என OpenAI நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வன்முறை தொடர்பான கேள்விகளைத் தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு அம்சம் ChatGPT-யிடம் ஏன் இல்லை என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஒரு குற்றச் செயலுக்குத் தொழில்நுட்பம் பொறுப்பேற்க வேண்டுமா என்ற விவாதம் இப்போது உலகளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.