ஐரோப்பாவில் உள்ள 67 கிளினிக்குகளில் விநியோகிக்கப்பட்ட ஒரு விந்தணு தானத்தின் மூலம், புற்றுநோயை உண்டாக்கும் அரிதான மரபணு மாற்றம் கொண்ட ஒரு கொடையாளிக்குக் குறைந்தது 197 குழந்தைகள் பிறந்துள்ளது ஒரு பெரிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தக் குழந்தைகள் சிலர் ஏற்கனவேப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சிலர் சிறு வயதிலேயே இறந்தும் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கின் கோபன்ஹேகனைத் தலைமையிடமாகக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி (ESB) மூலமாக இந்தக் கொடை விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த மரபணு மாற்றம், Li-Fraumeni சின்ட்ரோம் (Li-Fraumeni syndrome) என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவருக்கு ஆயுட்காலத்தில் பல்வேறுப் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை 90% வரை அதிகரிக்கக் கூடியது. 2005-ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோது இந்தக் கொடையாளித் தானம் செய்யத் தொடங்கினார்.

இவரது விந்தணுவில் TP53 மரபணுவில் ஏற்பட்ட ஒரு மாற்றம் காரணமாக, இவரால் கருத்தரிக்கப்பட்டக் குழந்தைகளில் அதிகபட்சம் 20% பேர் இந்த ஆபத்தான மரபணு மாற்றத்தைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

இந்தக் கொடையாளி மூலம் 75 குடும்பங்களுக்கு மேல் குழந்தைகள் பிறக்கக் கூடாது என்ற ESB-யின் வரம்பை மீறி, 197 குழந்தைகள் பிறந்திருப்பது, விந்தணு தானங்களைச் சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.