உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தில் தனது ஆறு மாதக் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பிரிஜேஷ் குமார் என்பவரின் மனைவியான மம்தா தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணிடம் தனது பச்சிளம் ஆண் குழந்தையை விற்றுள்ளார்.

இது குறித்துத் தகவலறிந்த பிரிஜேஷ் குமார், தனது குழந்தையை மனைவி விற்பனை செய்தது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்ற தாயே குழந்தையைப் பணத்திற்காக விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகாரின் பேரில் உடனடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தீவிர முயற்சிக்குப் பிறகு, விற்பனை செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனிதாவிடமிருந்த குழந்தையை மீட்ட போலீசார், அதனைத் தந்தையிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தாய் மம்தா தேவி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய அனிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். வறுமை காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.