சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், ரஷ்யன் விடுதிக்கு அருகிலுள்ள கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீள இரும்புப் பாலத்தை, மர்ம நபர்கள் இரவோடு இரவாகத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தை, கேஸ் கட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தித் துண்டு துண்டாக வெட்டியெடுத்த திருடர்கள், அதனை வாகனங்களில் ஏற்றித் தப்பிச் சென்றனர். மறுநாள் காலை பாலம் இருந்த இடத்தில் வெறும் கான்கிரீட் தூண்கள் மட்டுமே இருப்பதைக்கண்டு திகைத்த பொதுமக்கள், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் திவாரியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், இரும்புத் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த 15 பேரை அடையாளம் கண்ட போலீசார், முதற்கட்டமாக லோச்சன் கேவட், ஜெய்சிங் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 டன் எடையுள்ள இரும்புத் துண்டுகள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘டாடா ஏஸ்’ வாகனம் மற்றும் கேஸ் கட்டர் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மீதமுள்ள 10 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், ஒரு பாலத்தையே திருடர்கள் முழுமையாகத் திருடிச் சென்ற விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
