அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தனது விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படாவிட்டால், தனிக் கட்சி தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சமீபத்தில் குருமூர்த்தி மற்றும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே நடைபெற்ற நள்ளிரவுச் சந்திப்பைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் அதிமுக தரப்பில் இருந்து வெளியிடவில்லை
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் கெடு விதிப்பு மற்றும் டெல்லியில் அவர் மேற்கொண்ட முக்கியத் தலைவர்கள் சந்திப்புகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வெளிவருமா என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் மீண்டும் இணைக்கப்பட்டால், இது வரவிருக்கும் தேர்தல்களின்போது அதிமுகவின் பலத்தை ஒருங்கிணைக்க உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
